மயிலாடுதுறை-சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது
மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை
மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை-சேலம் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு புதிய ரெயில் சேவை தொடங்கியது. அப்போது ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயில் என்ஜின் முன்புறம் மாலை அணிவித்தும், பலூன்களால் அலங்கரித்தும், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தொடக்க நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி. பங்கேற்றதுடன், இந்த ரெயிலில் பயணம் செய்தார். முன்னதாக ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நாமக்கல் வழியாக.....
இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. இதே போன்று மறுமார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேர்கிறது.
அனைத்து ரெயில் நிலையங்களிலும்...
இந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வது குறிப்பிடத்தக்கதாகும். மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக செல்லும் இந்த ரெயில் இதுவரை இல்லாத வகையில் நாமக்கல் வழியாக செல்லும் முதல் ரெயில் சேவை ஆகும்.
தொலைதூரம் செல்லக்கூடிய வண்டி என்பதால் இந்த ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும், மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இந்த ரெயிலை முதலாவது நடைமேடையில் இருந்து இயக்க வேண்டும் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.