அமாவாசை சிறப்பு பூஜை


அமாவாசை சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 17 Jun 2023 7:45 PM GMT (Updated: 17 Jun 2023 7:46 PM GMT)

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.

மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்று, ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இங்கு உப்பாற்றங்கரையில் சயன நிலையில் இருந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் அமாவாசை பூஜை சிறப்பு வாய்ந்தது என்பது ஐதீகம். அதன்படி நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலில் குவிந்தனர்.

நீண்ட வரிசை

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாற்றில் நீராடிய பக்தர்கள், அதன்பிறகு நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை நடந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

அன்னதானம்

மேலும் கோவில் கொடிமரம் முன்பு நெய் தீபம் ஏற்றியும், முறை சீட்டில் எழுதியும் வேண்டுதலை நிறைவேற்றினர். இது தவிர கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

இதையொட்டி ஆனைமலை போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story