புதிய தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது -பிரதமர் மோடி பேச்சு
புதிய தேசிய கல்வி கொள்கை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நேற்று நடந்தது.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்றார்.
பிரதமர் மோடி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பிடித்த 69 மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் வழங்கினார்.
கனவு மெய்ப்பட வேண்டும்
இதன்பின்பு, 'அனைவருக்கும் வணக்கம்' என்று தனது பேச்சை தமிழில் தொடங்கிய அவர், தொடர்ந்து ஆங்கிலத்தில் பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது எதிர்காலம் பற்றி ஏற்கனவே முடிவு செய்து இருப்பீர்கள். எனவே, இன்று உங்களுக்கு வெற்றியின் தினம் மட்டுமல்ல, உங்களது ஆசைகள் நிறைவேறும் நாளும் ஆகும். உங்களது கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன்.
மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த தேசத்தை கட்டமைப்பவர்கள். நீங்கள் தான் நாளைய தலைவர்கள். பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோரின் தியாகம், அவர் களுடைய பிள்ளைகளின் சாதனைகளில் முக்கியமானது.
நாட்டின் வளர்ச்சிக்கான என்ஜின்
இந்த முறை இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே இந்திய இளைஞர்களை நம்பிக்கையோடு உற்று நோக்குகிறது. ஏனென்றால் இளைஞர்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான என்ஜின். உலகத்துக்கே இந்தியா தான் வளர்ச்சிக்கான என்ஜின். இது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த மிகச்சிறந்த பொறுப்பை இளைஞர்களாகிய நீங்கள் மேலும் முடுக்கிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இது, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த ஒவ்வொருவருக்கும் பெருமை. அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் தங்கியிருந்த அறை அவரது நினைவை பறைசாற்றும் வகையில் உள்ளது. அவரது சிந்தனைகள், மதிப்புகள் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
முன்னணியில் இந்தியா
கொரோனா பெருந்தொற்று அனைத்து நாடுகளையும் பெரும் சோதனைக்கு உள்ளாக்கியது. இந்தியா தன்னம்பிக்கையோடு கொரோனாவை எதிர்த்து போராடியது.
இதற்கு விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உதவினர். இதன் காரணமாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறையும் மீண்டெழுந்து புதிய வாழ்க்கையை பெற்றிருக்கிறது. தொழில்துறை, கண்டுபிடிப்பு, முதலீடு, சர்வதேச வணிகம் என எதுவாக இருந்தாலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் தொழில்துறை எழுச்சி அடைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக எலக்ட்ரானிக் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் செல்போன்கள் அதிகமாக உற்பத்தி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கண்டுபிடிப்புகள் தான் வாழ்க்கையின் பயணமாக மாறியிருக்கிறது.
முதலீடு தானாக வரும்
கடந்த 6 ஆண்டுகளில் புத்தொழில்கள் (ஸ்டார்ட் அப்) 15 ஆயிரம் சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு 417 ஆக இருந்து புத்தொழில் தற்போது சுமார் 73 ஆயிரம் ஆக உள்ளது. தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்பு சிறப்பாக இருந்தால் முதலீடு தானாக வரும்.
முக்கியமான தருணத்தில் உலக நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்தோம். ஐக்கிய அரபு அமீரகத்துடனும், ஆஸ்திரேலியாவுடனும் சமீபத்தில் வர்த்தக உடன்படிக்கை செய்திருக்கிறோம். உலக வினியோக சங்கிலியில் இந்தியா முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. தடைகளை வாய்ப்புகளாக பயன்படுத்தும் வசதியை இந்தியா பெற்றிருக்கிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
விவசாயிகள், இளைஞர்கள் செல்போன் செயலி மூலமாக அதிக தகவல்களை பெறுகிறார்கள். 'டிஜிட்டல்' பேமெண்டில் இந்தியா, உலகிற்கு தலைவராக விளங்குகிறது. இளைஞர்கள் தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் உங்களது திறமையை காண்பிக்க வேண்டும். இந்த புதிய சந்தை உங்களுக்காக காத்திருக்கிறது.
நான் ஒரு தொழில்முனைவோர் என சொல்வதே ஒரு காலத்தில் இளைஞர்கள் மத்தியில் கடினமாக இருந்தது. சம்பளம் பெறும் பணியில் உள்ளவர்கள் குறித்து தான் அதிகம் பேசப்பட்டது. ஆனால் அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது.
'நீங்கள் சொந்த காலில் நிற்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்தீர்களா?' என்று இப்போது மக்கள் கேட்கிறார்கள். வேலையாட்களாக இருப்பவர்கள் கூட, புத்தொழிலுடன் நெருங்கியிருப்பதை காணமுடிகிறது.
இளைஞர்களின் கடமை
புதிய தேசிய கல்வி கொள்கை என்பது வளரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறந்த முறையில் சுதந்திரம் கொடுப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.
தொழில்துறையை ஊக்கப்படுத்தவும், தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும் கார்ப்பரேட் வரி குறைப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற சீர்திருத் தங்கள் தொழில்துறையில் புதிய வாய்ப்பை ஏற்படுத்தும்.
அடுத்த 25 ஆண்டுகள் இளைஞர்களுக்கும், இந்தியாவுக்கும் முக்கியமான ஒன்றாகும். 75-வது சுதந்திர தினத்தில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி நாம் முன்னேறுகிறோம். இந்த காலகட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் கட்டமைக்க வேண்டிய கடமை இளைஞர்களுக்கு உள்ளது.
இந்தியாவின் வெற்றி
இளைஞர்களின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி. இளைஞர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி. இளைஞர்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்துக்காகவும் திட்டமிடும்போது புதியதொரு இந்தியாவுக்காக தானாகவே திட்டமிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்புகள், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வரும் புதிய திட்டங்கள், மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்து பேசினார்.
விழாவில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.