திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே புதிய பாசஞ்சர் ரெயில் சேவை


திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே புதிய பாசஞ்சர் ரெயில் சேவை
x
தினத்தந்தி 12 July 2022 11:45 PM IST (Updated: 12 July 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே புதிய பாசஞ்சர் ரெயில் சேவை தொடங்கியது. முதல் நாளில் குறைந்த பயணிகளுடன் அந்த ரெயில் சென்றது.

திண்டுக்கல்

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது ஏராளமான ரெயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது அவை ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயிலும் ஒன்றாகும். இந்த ரெயில் முன்பு நெல்லை-ஈரோடு-மயிலாடுதுறை இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. அந்த ரெயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கான பெட்டிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டன.

ஆனால் தற்போது நெல்லை-ஈரோடு இடையே ஒரு பாசஞ்சர் ரெயிலும், திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே ஒரு புதிய பாசஞ்சர் ரெயிலும் இயக்கப்படுகிறது. நெல்லை-ஈரோடு ரெயில் தினமும் காலை 11.12 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்து 11.15 மணிக்கு ஈரோட்டுக்கு புறப்பட்டு செல்கிறது. எனவே அந்த ரெயிலில் வரும் மயிலாடுதுறை பயணிகள், திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயிலுக்கு மாறி செல்லலாம். இதற்கு வசதியாக திண்டுக்கல்-மயிலாடுதுறை ரெயில் 11.30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படுகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர். திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் கூறினர்.

இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, மஞ்சத்திடல், திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரெயில் நிலையங்களில் அந்த ரெயில் நின்று செல்கிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு (ஈரோடு-நெல்லை ரெயிலுக்கு முன்பு) திண்டுக்கல்லை வந்தடைகிறது. இதனால் மயிலாடுதுறை-திண்டுக்கல் ரெயிலில் வரும் நெல்லை, மதுரை பயணிகள் எளிதாக ஈரோடு-நெல்லை ரெயிலில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story