போலீசாருக்கு புதிய ரோந்து வாகனங்கள்
கொடைக்கானலில் போலீசாருக்கு புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல் நகருக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அவர்கள் வரும் வாகனங்கள் மலைப்பகுதியில் விபத்தில் சிக்கினாலோ அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ அதனை உடனே சீரமைக்க கூடுதல் போலீசார் மற்றும் வாகனங்களை வழங்க மாவட்ட காவல்துறை முடிவு செய்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் புதியரோந்து வாகனங்களாக ஒரு ஜீப் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பிரையண்ட் பூங்கா பகுதியில் நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, புதிய ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார். ரோந்து பணியில் கூடுதலாக 10-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுலா இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான காவல் கட்டுப்பாட்டு அறை தற்போது உள்ள போலீஸ் நிலையத்தின் அருகிலேயே புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து உடனடியாக ரோந்து பணியை மேற்கொண்ட போலீசார் ஏரிச்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு கூறுகையில் ஜீப் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களில் பணியாற்றும் போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களுக்கான கட்டுப்பாட்டு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றார்.