புதிதாக கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை போலீஸ் நிலையங்கள்
கோவை மாநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் ஆகிய 3 போலீஸ் நிலையங்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று திறந்து வைக்கிறார்.
கோவை
கோவை மாநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் ஆகிய 3 போலீஸ் நிலையங்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று திறந்து வைக்கிறார்.
புதிய போலீஸ் நிலையங்கள்
கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதற்கு இடம் தேர்வு செய்யும் பணி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்படும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
திறப்பு விழா
அங்கு இன்ஸ்பெக்டர் அறை, எழுத்தர் அறை, கூட்டரங்கு, ஆயுதங்கள் வைக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தலா 25 போலீசார் வீதம் மொத்தம் 75 போலீசார் நியமிக்கப்பட்டனர். மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையமும் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த போலீஸ் நிலையங்களின் திறப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்கிறார்.
புதிய மென்பொருள்
இதையடுத்து மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தாங்கள் சேகரிக்கும் பிரத்யேக தகவல்களை பதிவு செய்ய வசதியாக 'ஆக்டோபஸ்' என்ற புதிய மென்பொருளை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைக்கிறார். இந்த புதிய மென்பொருள் மூலம் நுண்ணறிவு மற்றும் உளவுத்துறை போலீசார் சேகரிக்கும் தகவல்களை ஒருவருக்கொருவர் எளிதாக பரிமாறி கொள்ள முடிவதுடன், சேமித்து வைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவையொட்டி புதிய போலீஸ் நிலையங்கள் மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.