சைபர், பாலியல் குற்றங்கள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம்


சைபர், பாலியல் குற்றங்கள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம்
x

சைபர், பாலியல் குற்றங்கள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம்

கோயம்புத்தூர்

கோவை

கோவை பள்ளி மாணவ-மாணவிகள் இடையே சைபர் மற்றும் பாலியல் சார்ந்த குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம் செயல்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்து உள்ளார்.

செல்போன்கள் ஒப்படைப்பு

கோவை ஊரக பகுதிகளில் தொலைந்து போன, திருட்டு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு போலீசார் கண்டுபிடித்த 105 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பொதுமக்கள் தொலைத்த செல்போன்கள் மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் என மொத்தம் 235 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம்

குழந்தைகள் தான் வீட்டின், நாட்டின் எதிர்காலம். அவர்கள் பிரச்சினையை அவர்கள் எதிர்கொள்ள, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக கோவை மாவட்ட போலீஸ் சார்பில் புராஜெக்ட் பள்ளிக்கூட திட்டம் வருகிற 27-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருடன் போலீஸ் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள், அதனை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும், குழந்தைகள் தங்களது பிரச்சினைகள் குறித்து தெரிவித்தால், அதனை போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படும். இதையடுத்து ஊரக பகுதியில் உள்ள 997 பள்ளிக்கூடங்களிலும் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தொடுதல் குறித்த விழிப்புணர்வு

நாங்கள் பள்ளி குழந்தைகளை 2 வகையாக பிரித்து உள்ளோம். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பிரித்து உள்ளோம். இதில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு அளிக்க உள்ளோம். குறிப்பாக தவறான தொடுதல் குறித்தும், அவ்வாறு யாராவது தவறான நோக்கில் தொட்டால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

10 வயது மேற்பட்டவர்களுக்கு செல்போன்கள் மூலம் ஏற்படக்கூடிய சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தற்போது பள்ளி மாணவ-மாணவிகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளையும் விளையாடுகின்றனர். எனவே அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து எடுத்து கூற உள்ளோம். மேலும் எந்தெந்த பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்து அந்த பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story