புதியம்புத்தூரில் புதிய ரேஷன் கடை திறப்பு


புதியம்புத்தூரில் புதிய ரேஷன் கடை திறப்பு
x

புதியம்புத்தூரில் புதிய ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வடக்கன்குளம் பஞ்சாயத்து புதியம்புத்தூர் கிராம மக்கள் தங்களது ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள மாறநாடார்குடியிருப்பு கடைக்கு சென்று வந்தனர். எனவே புதியம்புத்தூரில் புதிய கிளை ரேஷன் கடை திறக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் புதியம்புத்தூரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வடக்கன்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், சாந்தி சுயம்புராஜ், வள்ளியூர் யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து துணை தலைவி பாக்கியசெல்வி குமரன் வரவேற்றார்.

புதிய ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், "எந்தவிதமான ஆலயமாக இருந்தாலும் அதற்கு செலவிடும் தொகையில் கொஞ்சமாவது பள்ளிக்கூடங்களுக்கும் பொதுமக்கள் செலவிட வேண்டும். ஆண்டுக்கு நான்கைந்து முறை ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்காக செலவிடும் தொகையில் தினந்தோறும் மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்கூடங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்வர வேண்டும். அதற்காக நான் ஆலயத்திற்கு எதிரானவன் அல்ல. இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். அதேவேளையில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்கும் நாம் உதவி செய்ய வேண்டும். தற்போதைய தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை கொடுத்து சாமானிய மக்களுக்கும் உதவியாக இருக்கின்றது" என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை சார்பதிவாளர் தினேஷ், வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story