மானியத்துடன் சுயதொழில் தொடங்க புதிய திட்டம்


மானியத்துடன் சுயதொழில் தொடங்க புதிய திட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 35 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க புதிதாக திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 35 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க புதிதாக திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

தொழில் முன்னோடிகள் திட்டம்

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம், மாவட்ட தொழில் மையம் சார்பில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விளக்க அறிமுக விழா நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்கள் எளிதாக வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்கும் வகையிலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற புதிய சுயதொழில் கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பதாரரின் பங்களிப்புத் தொகை தேவையில்லை.

மானியம்

மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கிக்கடனாக வழங்கப்படும். 35 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.1½ கோடி வரை வழங்கப்படும். மேலும் 6 சதவீதம் முன்முனை வட்டி மானியம் இருக்கிறது. நேரடி வேளாண்மை தவிர்த்து உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் கடனுதவியோடு இணைந்து மானியம் வழங்கப்படும்.

மேலும், தேர்வு செய்யப்பட்டு வங்கியில் கடன் ஒப்பளிப்பு ஆணை பெறும் விண்ணப்பதாரருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். ஆதிதிராவிட வகுப்பினருக்கு 30 திட்டங்களுக்கு ரூ.1.41 கோடி, பழங்குடியினர் வகுப்பினருக்கு 5 திட்டங்களுக்கு ரூ.23.64 லட்சம் மானியமாகவும், குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கையேடு வெளியீடு

எனவே, தகுதியும் ஆர்வமும் உடைய ஆதிதிராவிடர், பழங்குடியினர் இந்த திட்டத்தில் பங்கேற்று சுயமாக தொழில்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திட்டம் தொடர்பான கையேட்டை கலெக்டர் அம்ரித் வெளியிட்டார். இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், தொழில் மையம் பொது மேலாளர் சண்முக சிவா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ரமேஷ்கிருஷ்ணன், தாட்கோ பொது மேலாளர், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story