விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதலாக புதிய நிறுத்தங்கள்
விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதலாக புதிய நிறுத்தங்கள், சோதனை அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாதர், ஹவுரா எக்ஸ்பிரஸ்
ரெயில் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று, ரெயில்வே வாரியம் சில ரெயில்களில் புதிய நிறுத்தங்களை சோதனை அடிப்படையில் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய தாதர்-புதுச்சேரி செல்லும் வாரம் மும்முறை இயக்கப்படும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 11005, 11006) ஆரணி ரோட்டில் வருகிற 17-ந் தேதி முதல் நின்று செல்லும். இதில் வண்டி எண் 11005 தாதர்-புதுச்சேரி ரெயில் ஆரணி ரோட்டுக்கு அதிகாலை 3.33 மணிக்கு வந்து 3.34 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் புதுச்சேரி- தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11006) இரவு 11.51 மணிக்கு வந்து இரவு 11.52 மணிக்கு புறப்படும்.
ஹவுரா- புதுச்சேரி செல்லும் ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 12867, 12868) வருகிற 17-ந் தேதி முதல் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இதில் வண்டி எண் 12867 ஹவுரா-புதுச்சேரி ரெயில் திருவண்ணாமலைக்கு அதிகாலை 5.13 மணிக்கு வந்து 5.15 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். மறுமார்க்கத்தில் புதுச்சேரி- ஹவுரா ரெயில் (வண்டி எண் 12868) திருவண்ணாமலைக்கு பிற்பகல் 3.56 மணிக்கு வந்து 3.58 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
புதுச்சேரி, காரைக்கால் எக்ஸ்பிரஸ்
மேலும் சென்னை எழும்பூர்- புதுச்சேரி- சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16115, 16116) மயிலம் ரெயில் நிலையத்தில் வருகிற 16-ந் தேதி முதல் நின்று செல்லும். இதில் வண்டி எண் 16115 சென்னை எழும்பூர்- புதுச்சேரி ரெயில் மயிலம் ரெயில் நிலையத்துக்கு இரவு 8.28 மணிக்கு வந்து 8.30 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் புதுச்சேரி- சென்னை எழும்பூர் ரெயில் (வண்டி எண் 16116) மயிலத்துக்கு காலை 6.49 மணிக்கு வந்து 6.50 மணிக்கு புறப்பட்டுச்செல்லும்.
அதேபோல் சென்னை எழும்பூர்- காரைக்கால்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16175, 16176) கடலூர் துறைமுக சந்திப்பில் வருகிற 16-ந் தேதி முதல் நின்று செல்லும். இதில் வண்டி எண் 16175 சென்னை எழும்பூர்- காரைக்கால் ரெயில், கடலூர் துறைமுக சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.19 மணிக்கு வந்து 12.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் காரைக்கால்- சென்னை எழும்பூர் ரெயில் (வண்டி எண் 16176) நள்ளிரவு 12.35 மணிக்கு வந்து 12.36 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். இந்த ரெயில் நிறுத்தங்கள் அனைத்தும் சோதனை அடிப்படையிலான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.