தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய மாண்டஸ் புயல்...? அடுத்த 3 நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு


தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய மாண்டஸ் புயல்...?  அடுத்த 3 நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு
x

வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது.

சென்னை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது.

சென்னையில் மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழையை கொடுத்தது. இது ஆழ்ந்த தாழ்வு பகுதியாகவே இலங்கையின் வடக்கு பகுதியில் கரையை கடந்தது.

அதன்பின் உருவான தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலமும் சென்னைக்கு மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் சென்னைக்கு அருகில் இருக்கும் மற்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மழை பெய்தது.

அதன்பின்தான் மூன்றாவது வாரம் இன்னொரு தாழ்வு பகுதி உருவானது. வறண்ட காற்று காரணமாக தாழ்வு பகுதி மிக மிக மெதுவாக உருவானது.

பெரும் கஷ்டத்திற்கு பின்புதான் இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. ஆனால் இது முழுமையாக வலிமை அடையும் முன்பே நிலத்திற்கு அருகே வந்தது. அதோடு வறண்ட காற்று காரணமாக இது வலிமை குறைவாக இருந்தது. இதனால் பெரிதாக மழையை கொடுக்காமலே இது கடந்து சென்றது.

இந்த நிலையில்தான் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. முன்னதாக இந்த தாழ்வு பகுதி அந்தமான் நோக்கி வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இந்த தாழ்வு பகுதி சீன கடல் பகுதியிலேயே முழுமையாக உருவாகும் முன் அழிந்து போய்விடும் வாய்ப்புகளும் இருந்தன.

இந்த நிலையில்தான் தற்போது இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு

3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இது நிலத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. இதன் காரணமாக புயலாக மாறுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும்.

வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த தாழ்வு பகுதிக்கு முன்பாக நேற்று கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது.

டெல்டா மாவட்டங்களில் முக்கியமாக கனமழை பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. முக்கியமாக மன்னார்குடி, நீடாமங்கலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் நகரம், திருவாரூர் நகரம், கும்பகோணம், வலங்கைமான், சீர்காழி, சிதம்பரம் கடலூர், ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

கிழக்கு காற்று காரணமாக, டெல்டாவில் நிலவி வந்த மழை தட்டுப்பாடு பெரும் அளவில் தீர்க்கப்பட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு மழை பெய்தது. இது காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக உருவான மழை கிடையாது. இனிமேல்தான் தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் திருவாரூர், அரியலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதற்கான டேட்டா இன்னும் வரவில்லை.

இந்த மழை டெல்டா மாவட்டங்களில் பெரிதாக மழை இல்லாமல் ஏற்பட்ட இடைவெளியை போக்கும் வகையில் இருக்க போகிறது. நேற்றைய நாள் டெல்டா மாவட்டத்திற்கு மிகப்பெரிய நாளாக அமைந்தது. மழை அடுத்த 3 நாட்களுக்கு குறைவாக இருக்கும்.

8ம் தேதி வரை மழை குறைவாக இருக்கும். ஏனென்றால் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிக்கொண்டு இருக்கிறது. அதனால் 3 நாட்களுக்கு மழை குறைவாக இருக்கும். தென் தமிழ்நாட்டில் மழை குறைவாக இருக்கும், என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story