ரூ.34.65 கோடியில் புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம்


ரூ.34.65 கோடியில் புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம்
x

கொல்லிமலையில் ரூ.34.65 கோடியில் அமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பயிற்சி மையத்தை வேலைவாய்ப்பு துறை ஆணையர் வீரராகவராவ் திறந்து வைத்தார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

புதிய தொழிற்பயிற்சி நிலையம்

நாமக்கல் மாவட்டம் செம்மேட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் 4.0 தொழில்நுட்ப மையத்தை தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, பொன்னுசாமி எம்.எல்.ஏ., கொல்லிமலை அட்மா குழு சேர்மன் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது வேலைவாய்ப்பு துறை ஆணையர் வீரராகவராவ் பேசியதாவது:- டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியாக 87.5 சதவீத பங்களிப்புடன் ரூ.34 கோடியே 65 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்பங்களுடன் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.3 கோடியே 73 லட்சம் செலவில் கட்டிடப் பணிகளும், ரூ.30 கோடியே 69 லட்சம் செலவில் எந்திரங்கள், உதிரிபாகங்கள், நவீன மென்பொருள்கள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசின் மானிய கோரிக்கையில், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மாற்ற முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2 ஆயிரத்து 877 கோடியே 48 லட்சம் செலவில் 4.0 தரத்தில் தொழில் திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையங்களில் வளர்ச்சியில் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும்.

இத்தொழில் நுட்பம் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். இயற்கை வளம் நிறைந்த அமைதியான சூழலில் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளவே கொல்லிமலை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல இணை இயக்குனர் ராஜகோபாலன், உதவி இயக்குனர் திறன் பயிற்சி பார்த்திபன், தொழிற்பயிற்சி மைய முதல்வர் பால முரளிதர், கொல்லிமலை தாசில்தார் அப்பன் ராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சரவணன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story