தமிழகத்தில் 12 பேருக்கு புதிய வகை கொரோனா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் 12 பேருக்கு புதிய வகை கொரோனா அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2022 5:28 AM IST (Updated: 6 Jun 2022 5:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் புதிய வகை கொரோனா 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் மற்றும் இதர வகைகளான பி.ஏ. 1, 2, 3 என 7 வகைகளில் இருப்பதாக உலகம் முழுவதும் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 வகைகள் தான் தொற்றுகளில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு நாவலூர் பகுதியில் ஒரு நபருக்கு பி.ஏ.4 உருமாற்றம் பெற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

இந்தநிலையில் நேற்று 150 மாதிரிகள் ஐதராபாத்தில் உள்ள சி.டி.எப்.டி ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் தமிழகத்தில் 4 பேருக்கு பி.ஏ.4 தொற்றும், 8 பேருக்கு உருமாற்றம் பெற்ற பி.ஏ.5 இருப்பது கண்டறியப்பட்டது. ஐதராபாத்தில் இருக்கின்ற இந்த ஆய்வகம் நாம் அனுப்பி வைத்திருக்கிற 150 மாதிரிகளில் 12 மாதிரிகள் மட்டும் பி.ஏ.4, பி.ஏ.5 என்ற அளவில் வைரஸ் வந்திருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அலட்சியம் வேண்டாம்

துறையின் செயலாளர் தொலைபேசி மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருக்கிறார். தொற்று பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இது தொடர்பான ஆய்வக அறிக்கை விவரங்களை மத்திய அரசு அனுப்பியவுடன் வெளியிடப்படும்.

கொரோனா தொற்று குறைந்து வருகிறது என மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா தொற்று முழுவதுமாக நீங்கும் வரை முக கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வேண்டும். அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புத்தக கண்காட்சியை டி.ஆர்.பாலு எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

புதிய வகை கொரோனா

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு பதில்

அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது என முதல்கட்ட தகவல் உள்ளது. தமிழகத்தில் 43 லட்சத்து 8 ஆயிரத்து 835 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 167 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை. அதேபோல் பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக போடப்படுகிறது. இதற்கான இலக்கான 26 லட்சத்து 52 ஆயிரத்தில் இதுவரை 12 லட்சத்து 24 ஆயிரம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அவர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவுமறைவின்றி செயல்பட்டு வருகிறது. மிகவும் குறைவான விலையில்தான் மருந்து பொருட்கள் வாங்கப்படுகின்றன. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் தகவல் கேட்கப்படும். இந்த ஆண்டுக்கான டெண்டர் முடிந்ததா என்று தெரியவில்லை. அதை உறுதி செய்துவிட்டு பதில் கூறுகிறேன். குழந்தைகளுக்கான உணவையும், தாய்மார்களின் உணவையும் மாற்றி ஒப்பிடக்கூடாது' என்றார்.


Next Story