குறுவை சாகுபடிக்கேற்ற சன்ன நெல் ரகம் அறிமுகம்


குறுவை சாகுபடிக்கேற்ற சன்ன நெல் ரகம் அறிமுகம்
x

மடத்துக்குளம் வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கேற்ற புதிய சன்ன நெல் ரகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கேற்ற புதிய சன்ன நெல் ரகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

விதைப்பண்ணைகள்

மடத்துக்குளம் வட்டாரத்தில் அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் 2200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. இதில் ஏடிடி 45, கோ 51, ஏடிடி 37, ஏஎஸ்டி 16, ஏடிடி 43, டிபிஎஸ் 5, ஏடிடி 36 உள்ளிட்ட குறுகிய கால நெல் ரகங்கள்அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன.அத்துடன் புதிய நெல் ரகமான கோ 55 ரக விதைகள் விவசாயிகளுக்கு போதிய அளவில் கிடைக்கும் வகையில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளால் பயிரிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட இந்த விதைப்பண்ணைகளில் திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.கடத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெல், கோ 55 ஆதாரநிலை 1 விதைப்பண்ணையில் ஆய்வு செய்த அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு வருடமும் மாறி வரும் பருவநிலை மற்றும் நீர்த் தேவைக்கேற்ற அதிக மகசூல், சமைக்கும் திறன், நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புத் திறன் உடைய புதிய நெல் ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த வரிசையில் கோ 55 ரகம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

வயலாய்வு

குறுவை, சொர்ணவாரி, கார் மற்றும் நவரை சாகுபடிக்கு ஏற்ற இது 115 நாட்களில் வளரக் கூடிய நடுத்தர குட்டை ரகமாகும். மிகவும் சன்னமான தானியங்களைக் கொண்ட இந்த ரகம் ஏக்கருக்கு 2400 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. பாக்டீரியா, இலை கருகல் மற்றும் துங்குரோ வைரஸ்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. அரவைத் திறன் 66 சதவிகிதமும், நெல்லில் இருந்துஅரிசி 62 சதவிகிதமும் தரக்கூடியது.அமிலோஸ் அளவு (21.38 சதவீதம்) இடைப்பட்ட அளவில் இருப்பதால் சமையலுக்கு ஏற்றது.எனவே இந்த புதிய ரகத்தினை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவித்தார்.

மேலும் அவர், கலவன்கள் இல்லாத நல்ல தரமான விதைகள் விவசாயிகளுக்குக் கிடைக்க ஆதாரநிலை விதைப் பண்ணைகளை கூடுதல் கவனமுடன், உரிய நேரத்தில் வயலாய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு விதைச் சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். குறுவை ரகங்களுக்கு பூ பருவம், முதிர்ச்சிப் பருவ வயலாய்வுடன் பின்முதிர்ச்சி பருவத்திலும் ஒரு ஆய்வு மேற்கொண்டு மத்திம, நீண்டகால ரகக் கலப்பு இல்லாதவாறு வயல்தரத்தினை பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.கலவன்கள் அகற்றும் பொழுது முழுதூரையும் அகற்ற வேண்டும் என்றும் அவ்வாறு அகற்றப்பட்ட கலவன்களை எந்த காரணம் கொண்டும் வயல் வெளிக்குள் போடக் கூடாது என்றும் எச்சரித்தார்.களைகள் இருந்தால் அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லையெனில் அறுவடையின் போது, அந்த களை விதைகளும் கலந்து வயல் தரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது விதைச் சான்று அலுவலர்கள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.



Next Story