புதுப்புது வைரஸ்கள் வருகிறது: 'முககவசம், தனிமனித இடைவெளி மிக அவசியம்' அமைச்சர் தகவல்
புதுப்புது வைரஸ்கள் வருகிறது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி மிக அவசியமான ஒன்று என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
துணை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் கலந்தாய்வு என்பது தனியார் முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் தனியார் முகமையை தாண்டி, அரசே முழுமையாக ஏற்று நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு வெளியிட்டு இருக்கும் இந்த படிப்புகளில் படித்து முடித்ததும், அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தர முடியாது. மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வெளியான தகவல் தவறானது. அது போன்ற மருந்து தட்டுப்பாடு எதுவும் இல்லை. 2½ மாதங்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது. நான் பொதுவாக ஆய்வுக்கு செல்லும்போது, மருந்துகள் கையிருப்பு இருக்கிறதா? காலாவதியான மருந்துகள் எதுவும் பயன்படுத்தப்படுகிறதா? என்று தான் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வருகிறேன்.
பதற்றப்பட தேவையில்லை
வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் 4 முதல் 5 நாடுகளில் ஒமைக்ரான் வகை மாற்றப்பட்ட பிஏ-4, பிஏ-5 தாக்கம் இருந்து தற்போது, பிஏ-2.74, பிஏ-2.75, பிஏ-2.76 என புது வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை. இருந்தாலும் பதற்றப்பட தேவையில்லை. கடந்த 6 மாதங்களாக உயிரிழப்புகள் பெரியளவில் இல்லை.
சென்னை, கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. மீண்டும் நோய்த்தொற்று அச்சம் வந்துவிடக்கூடாது என்ற நிலையில்தான் முககவசம், தனிமனித இடைவெளியை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம். பூஸ்டர் தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி செய்து வருகிறோம். இதுவரை 19 சதவீதம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இந்த மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. இதில் வருகிற 18 மற்றும் 25-ந் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு பூஸ்டர் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் ரூ.386.25 காசு செலுத்தி தான் போட முடியும்.
புதுப்புது வைரஸ்...
இன்புளூயன்சா வைரஸ் தாக்கத்தால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதை சாதாரணமாக எண்ணிவிடமுடியாது. இது பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புதுப்புது வைரஸ் தொற்று வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முககவசம், தனிமனித இடைவெளி மிக அவசியமான ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.