குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்தது
தோளப்பள்ளி ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீர்
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த தோளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தோளப்பள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர் போலி சாதி சான்று கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஊராட்சி மன்ற அதிகாரம் பறிக்கப்பட்டது. இதன் காரணமாக ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்வது முற்றிலுமாக தடைப்பட்டது.
இந்தநிலையில், காமராஜபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே உடைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் மழைநீரோடு கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கி விடுகிறது. எனவே கால்வாயை சீரமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலைமறியல்
நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, கால்வாயில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் இரவு முழுவதும் கடும் துர்நாற்றத்துடன் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், கழிவுநீர் கால்வாயை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.