குறுவை அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி


குறுவை அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே குறுவை அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி நடந்து வருகிறது.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே குறுவை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி நடந்து வருகிறது.

50 ஆயிரம் வாத்துகள்

மணல்மேடு அருகே வில்லியநல்லூர், கிழாய் உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 15 நாட்களுக்கு மேலாக குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில், வாத்துகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இதுகுறித்து வாத்து மேய்க்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:- தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நாங்கள் குடும்பத்துடன் சென்று வாத்துகளை மேய்த்து வருகிறோம். குறிப்பாக வயல்களில் அறுவடை காலங்களிலும், நிலத்தை உழுது சேறும், சகதியுமாக இருக்கும் நிலையிலும் வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுவோம்.

தற்போது தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை முடிந்த வயல்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன. வயலில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் வயலில் கிடைக்கும் நத்தை, நண்டு, சிறு பூச்சி, புழு ஆகியவற்றை தின்று இரையாக்கிக் கொள்ளும். இதன் மூலம் வாத்துகளுக்கு இரை கிடைப்பதுடன், மேய்ச்சலுக்கு விடுவதால் வாத்துகளின் கழிவுகளும் வயலுக்கு இயற்கை உரமாக பயன்படும்.

உரிய தொகை

வாத்துகளை மேய்ச்சலுக்கு விட வயல் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, அதற்குரிய பணத்தை கொடுத்த பின்னர் வயலில் தண்ணீர் பாய்ச்சி மேய்ச்சலுக்கு விடுவோம். பொதுவாக குஞ்சு பொரித்த 4½ மாதங்களில் வாத்துகள் முட்டையிட ஆரம்பிக்கும். அதனை தொடர்ந்து சுமார் 1½ ஆண்டுகளுக்கு பின்னர் முட்டையிடுவது குறையும்போது அந்த வாத்துகளை கறிக்கு அனுப்பி விடுவோம். தற்போது இங்கு முட்டையிடும் வாத்துகளும், கறிக்கு அனுப்பப்படும் வாத்துகளும் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.

வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்யும் போது முட்டைகளை சுமார் ரூ.5 முதல் ரூ.8 வரை விற்பனை செய்வோம். இந்த வாத்து முட்டைகளை கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இதேபோல் கறி வாத்துகளை ஜார்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story