பிரித்தியங்கிரா கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமம் பிரித்தியங்கிரா கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி மேலவல்லம் கிராமம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற பிரித்தியங்கிரா கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நடைபெற்று தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் 48-ம் நாளான நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு முன்புறம் உள்ள யாக குண்டத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு பிரித்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்மனை வழிபாடு செய்தனர். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் சார்பில் ஆலய அறங்காவலர் பாரிவள்ளல் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.