நெய்வேலி என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிப்பதா?- சசிகலா கண்டனம்


நெய்வேலி என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிப்பதா?- சசிகலா கண்டனம்
x

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்களை புறக்கணிப்பதா? என சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம் தற்போது புதிதாக தேர்வு செய்துள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. என்.எல்.சி. நிறுவனம் உருவாக்குவதற்கு, அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். ஆனால், அப்படியான உறுதிமொழியை என்.எல்.சி. நிர்வாகம் தொடர்ந்து மீறி வருவது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் தங்களுடைய தனித்துவமான திறமைகளால் எண்ணற்ற துறைகளில் சாதனை படைத்து இன்றைக்கும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே என்.எல்.சி. நிறுவனம் தமிழகத்தை புறக்கணிப்பது என்பது இந்த மண்ணின் இளம் தலைமுறையினருக்கு இழைக்கப்படும் அநீதியாகத்தான் கருதப்படும்.

எனவே, தி.மு.க. அரசு தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்திடும் வகையில், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று மத்திய அரசும் இதில் உடனடியாக தலையிட்டு, ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story