ஆந்திர மாநில போலீஸ் ஜீப்பை கடத்தி வந்த நெய்வேலி வாலிபர் சிக்கினார்
ஆந்திர மாநிலம் சித்தூரில் போலீஸ் ஜீப்பை திருடிக்கொண்டு ஓட்டி வந்தவரை வந்தவாசி அருகே போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
வந்தவாசி
ஆந்திர மாநிலம் சித்தூரில் போலீஸ் ஜீப்பை திருடிக்கொண்டு ஓட்டி வந்தவரை வந்தவாசி அருகே போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
போலீஸ் ஜீப் திருட்டு
ஆந்திர மாநிலம், சித்தூர் நகர போலீ்ஸ் நிலையம் முன்பு ரோந்து ஜீப்பை நேற்று போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். பிற்பகல் அந்த ஜீப்பில் ஏறிய ஒருவர் அதனை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு தமிழகத்துக்குள் நுழைந்தார்.
ஜீப் திருடப்பட்டதை அறிந்த ஆந்திர போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு பகுதிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு அதனை தடும் பணியை தீவிரப்படுத்தினர்.
ஜீ.பி.எஸ்.கருவி மூலம் இருப்பிடத்தை பார்த்தபோது அந்த ஜீப் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திர போலீசார் அளித்த தகவலின்பேரில் வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிக்கினார்
இந்த நிலையில் நேற்று மாலை வந்தவாசி பஜார் வீதி வழியாக ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட போலீஸ் ஜீப் வந்தது. அதனை போலீசார் நிறுத்தினர்.
உடனே ஜீப்பை நிறுத்திய 25 வயது வாலிபர் தப்பியோடினார். போலீசார் அவரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரையும், போலீஸ் ஜீப்பையும் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சித்தூர் நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த வந்தவாசி தெற்கு போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர் பாண்டியன் என்பவரது மகன் சூர்யா (வயது 25) என்றும் தனது ஊர் சித்தூர் என்றும் நெய்வேலி என்றும் மாறி மாறி கூறினார்.
சித்தூர் போலீசார் வருகை
இந்த நிலையில் சித்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான சித்தூர் நகர போலீசார் திங்கள்கிழமை இரவு வந்தவாசி தெற்கு காவல் நிலையம் வந்தனர்.
அவர்களிடம் அந்த இளைஞரையும், திருடி வரப்பட்ட போலீஸ் ஜீப்பையும் தெற்கு போலீசார் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் மற்றும் ஜீப்புடன் சித்தூர் போலீசார் ஆந்திராவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.