கோவை, நீலகிரியில் 34 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, நீலகிரியில் 34 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி னார்கள். அப்போது செல்போன்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, நீலகிரியில் 34 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி னார்கள். அப்போது செல்போன்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
கார் வெடிப்பு சம்பவம்
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது.
இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக அவருடைய வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடிபொருட்கள், டைரி உள்பட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் விசாரணை நடத்தி, கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), அப்சர்கான் (28), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு (உபா) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த நிலையில் கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முகமது அசாருதீன் உள்பட 6 பேரையும் சென்னை அழைத்து சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அத்துடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த கோட்டை மேடு, ஜமேஷா முபின் வீட்டிலும் சோதனை செய்தனர்.
அவர்கள், தொடர்ந்து நடத்திய விசாரணையில், தடை செய்யப் பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருவது தெரியவந்தது.
கோவையில் 33 இடங்களில் சோதனை
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கோவையில் ஜமேஷா முபின் மற்றும் கைதான 6 பேர் வீடுகள் உள்பட 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிகாலையிலேயே கோவை வந்தனர்.
இதில் ஜமேஷா முபின் தனது வீட்டுக்கு பிளாஸ்டிக் டிரம் வாங்கிய குனியமுத்தூரை சேர்ந்த நாசர் என்பவரின் வீடு மற்றும் கோவையில் உக்கடம் வின்சென்ட் ரோடு, புல்லுக்காடு, அன்பு நகர், ஜி.எம்.நகர், குனியமுத்தூர் வசந்தம்நகர், குறிஞ்சி நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நடத்தப்பட்ட வீடுகளில் ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சல்லடைபோட்டு தேடினர்.
செல்போன்கள் பறிமுதல்
சோதனையின்போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே அனுமதிக்க வில்லை. அத்துடன் வீட்டுக்குள் வேறு யாரையும் அனுமதிக்க வில்லை. சோதனை நடைபெற்ற 33 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது. 10 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் சிலரின் வீடுகளில் இருந்து செல்போன்கள், மின்னணு சாதனங் கள், மடிக்கணினி, பிளாஸ்டிக் டிரம் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் அறிவிக்கப்பட வில்லை.
நீலகிரி
இதேபோல நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே ஓட்டுப் பட்டறை என்ற இடத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதற்கிடையே இந்த சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், நாகப்பட்டினம் உள்பட 8 மாவட்டங்களில் 43 இடங்களிலும், கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் சின்னங்களுக்கு அதிக சேதம் விளைவிப்பதற்காகவும், குறிப்பிட்ட நபர்களிடையே பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் திட்டமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் சாதனங்கள்
தற்போது நடத்தப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர்களின் வீடுகளில் இருந்து டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் குற்றம் சாட்டக் கூடிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும் இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பயங்கரவாத செயல்களை செய்வ தற்காக ஆன்லைனில் ஷாப்பிங் தளங்கள் மூலம் மேம்படுத்தப் பட்ட வெடிக்கும் சாதனங்களை தயாரிக்க வெவ்வேறு ரசாயன மற்றும் பிற பொருட்களை பெற உயிரிழந்த ஜமேஷா முபினுடன் சேர்ந்து சதி செய்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.