என்.ஐ.ஏ. விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும்
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
கோவையில் ஆலோசனை
கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திராபு கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகளும் விரைந்து சென்று துரித நடவடிக்கை எடுத்து, சம்பவ இடத்தை பாதுகாப்பாக வைத்து, இறந்த நபர் யார்? என்று கார் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை 6 குற்றவாளிகளை மிக துரிதமாக கைது செய்யப்பட்டு அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதில் 5 பேரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப் பட்டது. இதன் மூலம் மேலும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.
குறுகியகாலத்தில் துப்புதுலக்கிய கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு களை தெரிவித்து உள்ளோம். அவர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ.வுக்கு உதவி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு வழங்க பரிந்துரை செய்துள்ளார். தமிழக உள்துறை, இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு கொடுப்பதற்கு உத்தரவு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்துள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். மேற்கொண்டு அவர்கள் இந்த வழக்கை எடுப்பார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக காவல்துறை செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
5 இடங்களில் சதி செய்ய திட்டமா?
கேள்வி:- கோவை, சென்னை மற்றும் பல மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறதே உண்மையா?
பதில்:- புலன் விசாரணையில் உள்ள எல்லா விவரங்களையும் சொல்லமுடியாது.
கேள்வி:- கோவையில் 5 இடங்களில் சதி செய்ய திட்டமிட்டதாக ஆதாரம் கிடைத்துள்ளதா?
பதில்:- அது பற்றி கூற முடியாது. கைப்பற்றப்பட்ட எல்லா ஆதாரங்கள் குறிப்பாக மொபைல் போன் உள்ளிட்ட என்னென்ன ஆதாரங்களை திரட்டி வைத்து உள்ளோமோ அவற்றை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்போம்.
அலர்ட் செய்ததா?
கேள்வி:- இந்த வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் இருந்தால் தமிழக காவல்துறை மேலும் சிலரை கைது செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்குமா?
பதில்:- இந்த வழக்கில் துப்புதுலக்கி அதிகபட்ச நடவடிக்கை எடுத்துள்ளோம். யார்-யார் திட்டமிட்டனர்? யார் யார் செயல் படுத்தினார்கள்? என்று விசாரணை நடத்தி அனைவரையும் கைது செய்துள்ளோம். என்.ஐ.ஏ. மேலும் விசாரணை செய்யும்போது அவர்களுக்கு ஆதாரம் கிடைத்தால் அதனை அவர்கள் செய்வார்கள்.
கேள்வி:- மத்திய அரசு கடந்த 18-ந் தேதியே அலர்ட் செய்து உள்ளதாக அண்ணாமலை கூறி உள்ளாரே?
இதற்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதில் அளிக்கவில்லை. கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, "அப்படி எந்த அலர்ட்டும் எங்களுக்கு வரவில்லை" என்றார்.
முன்னதாக இந்த வழக்கில் துப்பு துலக்கிய 30 போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.