ரூ.5¾ லட்சம் போதைப்பொருள் பறிமுதல் நைஜீரிய பெண் கைது


ரூ.5¾ லட்சம் போதைப்பொருள் பறிமுதல் நைஜீரிய பெண் கைது
x

கானத்தூரில் ரூ.5¾ லட்சம் போதை பொருளுடன் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ைண போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன், பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்கச்சாவடி அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் அங்கிருந்த நபரிடம் ஏதோ ஒரு சிறு பொட்டலத்தை கொடுப்பதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த பெண், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஆன்யனி மோனிகா (வயது 30) என தெரியவந்தது.

ரூ.5¾ லட்சம் போதை பொருள்

இவர், கடந்த 9 மாதங்களாக சென்னை வேளச்சேரி பாரதி நகர் கோதாவரி தெருவில் தங்கி உள்ளார். தனது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக நைஜீரியாவில் இருந்து மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார். வந்த இடத்தில் வேலை எதுவும் இல்லாததால் செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது ஒருவர், கொக்கைன் போதை பொருளை சென்னையில் விற்பனை செய்து கொடுத்தால் பணம் தருவதாக கூறியதால், சென்னையில் தங்கி போதை பொருள் விற்பனை செய்தது தெரிந்தது.

ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி வந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்பதாகவும் கூறினார். அவரிடம் இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் தலா ஒரு கிராம் வீதம் 72 சிறு கொக்கைன் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றுடன், கொக்கைன் விற்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு நைஜீரியா நாட்டு பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திறம்பட செயல்பட்டு கொக்கைன் போதை பொருளை கைப்பற்றி, நைஜீரிய நாட்டு பெண்ணை கைது செய்த தனிப்படை போலீசாரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.


Next Story