இரவு ரோந்து பணி போலீசார் விவரம் முகநூலில் மீண்டும் பதிவேற்றம்


இரவு ரோந்து பணி போலீசார் விவரம் முகநூலில் மீண்டும் பதிவேற்றம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் முகநூலில் பதிவேற்றம் செய்வது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

விழிப்புணர்வு பதிவுகள்

தமிழகத்தில் அந்தந்த மாவட்ட போலீசாரின் பெயரில் முகநூலில் (பேஸ்புக்) இயங்கி வருகிறது. இதில் போலீசாரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் பாராட்டுத்தக்க நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகள் போன்றவை பகிரப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு உதவியாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் மற்றும் அவர்களது செல்போன் எண் உள்ளிட்ட விவரமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

கொரோனா காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த செயல்பாடு முகநூலில் இன்றளவும் தொடர்ந்து போலீசார் கடைப்பிடித்து வருகின்றனர். இதற்காக சமூகவலைத்தள பிரிவில் போலீசாரை நியமித்து பணி மேற்கொள்கின்றனர்.

மீண்டும் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட போலீசார் சார்பிலும் முகநூலில் pudukkottai district police என்ற ஐ.டி.யில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், போலீசாரின் பாராட்டுத்தக்க நடவடிக்கைகள் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேர ரோந்து போலீசார் விவரமும் பதியப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்தின் கடைசியில் இருந்து இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதன்பின் முகநூலில் இரவு நேர ரோந்து போலீசார் விவரம் பதிவேற்றம் மீண்டும் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் பெயர், பதவி, காவல்நிலையம், தொடர்பு எண் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சப்-டிவிசன் வாரியாகவும், போலீஸ் நிலையங்கள் வாரியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு

இரவில் குற்றச்சம்பவங்கள் அல்லது சமூக விரோத செயல்கள் தொடர்பாக ரோந்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க பயனுள்ளதாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் முகநூலில் நேற்று முன்தினம் இரவு 8.50 மணியளவில் இரவு ரோந்து போலீசார் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஒரு மணி நேரத்தில் 25 பேர் லைக் செய்து பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு இந்த பணியை தொடங்கியிருப்பதை புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து தொடர்ந்து பதிவிட கூறியிருந்தனர்.

நேற்று முன்தினம் பதிவிட்ட பதிவுக்கு நேற்று இரவு நேர நிலவரப்படி 55 பேர் லைக் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் முகநூலில் பதிவேற்றம் செய்தனர். மேலும் வாட்ஸ்-அப்பிலும் அந்த விவரத்தை மாவட்ட போலீசார் பகிர்ந்தனர்.


Next Story