நீலகிரி பழங்குடியின மக்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
நீலகிரி பழங்குடியின மக்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, கைவினை பொருட்களை பரிசாக வழங்கினர்.
ஊட்டி
நீலகிரி பழங்குடியின மக்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, கைவினை பொருட்களை பரிசாக வழங்கினர்.
ஜனாதிபதி
இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து உள்ளதாக மகிழ்ச்சியடைந்தனர். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்தார்.
அப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வருவதாக இருந்தது. இதனால் நீலகிரிரியில் கோத்தர், இருளர், குறும்பர், பனியர், காட்டுநாயக்கர், தோடர் என 6 பிரிவு பழங்குடியின மக்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டனர். இதற்காக முறையாக அனுமதியும் பெறப்பட்டது. இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பழங்குடியின மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கைவினை பொருட்கள்
இதுதொடர்பாக நீலகிரி பழங்குடியின தலைவர் ஆல்வாஸ், செயலாளர் புஷ்பகுமார் ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர். அதில் பழங்குடியின மக்கள் சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 6 பிரிவு பழங்குடியின மக்கள் 57 பேர் ஊட்டியில் இருந்து பஸ் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 75 பிரிவுகளை கொண்ட பழங்குடியினர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தநிலையில் டெல்லி சென்ற பழங்குடியின மக்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனது மாளிகையில் நேரில் சந்தித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பழங்குடியின மக்கள் தாங்கள் கொண்டு சென்ற மூங்கிலால் செய்த கைவினை பொருட்களையும், பிரத்யேக ஓவியங்கள், எம்ராய்டரி துணிகள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினை பொருட்களையும் ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கினர்.
குழு புகைப்படம்
அப்போது நீலகிரிக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஜனாதிபதி பாரம்பரிய உடையணிந்த பழங்குடியின மக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அம்பேத்கர் சர்வதேச மையம், நாடாளுமன்ற கட்டிடம், பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களுக்கு பழங்குடியின மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை திரும்புகின்றனர். இதற்கான முழு செலவையும் பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.