இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதல் மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்பு-கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல்


இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதல் மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்பு-கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2023 7:00 AM IST (Updated: 9 Jun 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதல் மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்புள்ளது என்று கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதல் மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்புள்ளது என்று கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறைகள் சார்பில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது.

இதற்கு, கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இயக்குநர் தீபக் பில்ஜி வரவேற்றார். நிகழ்ச்சியில், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ பேசும் போது, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அரசு கொள்கை வகுத்து செயல்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்தாண்டு மாநிலத்தில் 3 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், 80 சதவீத மரக்கன்றுகள் உயிர் பிழைத்துள்ளன.

தமிழகம் முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 7 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பசுமை போர்வை

வனங்களில் பசுமை போர்வையை மீட்டெடுக்க மரக்கன்றுகள் நடவு பணி உதவும். சீரழிந்த வனங்களை மீட்டெடுத்தல் நடவடிக்கைக்காக நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சதுப்பு நிலங்களில் பொருளாதார மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு சதுப்பு நிலத்தின் பொருளாதார மதிப்பு ரூ.54 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காலநிலை மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசு கொள்கை வகுத்து உள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் முதல் காலநிலை மாற்றம் குழு, மாவட்ட கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மாவட்ட வன அலுவலர் காலநிலை மாற்ற அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மின் வாகன பயன்பாடு

நீலகிரி மாவட்டத்தை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதல் மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்புள்ளது. இதற்காக இங்கு மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். நீலகிரியின் பசுமை போர்வை அதிகரிக்க வேண்டும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க 3 மாதங்களில் ஒரு ஒருங்கிணைத்த திட்டம் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித், தமிழ்நாடு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், மான்டெக் சிங் அலுவாலியா, எரிக் சோல்ஹிம், ஏ.ராமசந்திரன், சவுமியா சுவாமிநாதன், நிர்மல்ராஜா, ரமேஷ் ராமசந்திரன், சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணை இயக்குநர் எல்.சவுமியா நன்றி கூறினார்.


Next Story