மகசூல் அதிகரிக்க உதவும் நிலப்போர்வை
விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது அவசியமாகிறது.இதனைக் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியங்களை வழங்கி வருகின்றன.
மண் போர்வை
தோட்டக்கலைத் துறை மூலம் நிலப் போர்வை அமைக்க முன் வரும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.பயிர் நன்றாக வளர்வதற்கு பயிரைச்சுற்றி உள்ள பகுதிகளில் வைக்கோல், வாழைமட்டை, தென்னை நார்க்கழிவு, சோளத்தட்டை உள்ளிட்ட வேளாண் கழிவுகளைக் கொண்டு மண் மீது பரப்புவது மண் போர்வை எனப்படும்.இதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கும் மண் ஈரத்தை பாதுகாப்பதற்கும் ஏற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.சமீப காலங்களாக மண்போர்வையாக பாலித்தீன் தாள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பாலிதீன் தாளை மண் போர்வையாக உபயோகிப்பதால் நிலத்தின் மேல் தண்ணீர் ஓட்டத்தை முழுமையாக தவிர்ப்பதுடன் நீர் ஆவியாதலை கட்டுப்படுத்தி அதன் மூலம் உப்பு மேல்நோக்கி வருவதைத் தடுக்க முடியும்.
சீரான வெப்பம்
அத்துடன் நீர் இழப்பைத் தவிர்க்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் முடிகிறது.மண்ணில் இடக்கூடிய சத்துப் பொருட்கள் நீருடன் கலந்து பயிரின் வேருக்கு கீழே வெளியேறி செல்வது தடுக்கப்படுகிறது.களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், இரவு மற்றும் குளிர்காலத்தில் கூட மண்ணில் வெப்பத்தை சீரான அளவில் நிலை நிறுத்துகிறது.இதனால் பயிர் சிறப்பாக வளர்வதற்கும் விதைகளின் முளைவிடும் தன்மையை துரிதப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
மண் முழுவதுமாக மூடப்படுவதால் மழைத்துளிகளின் நேரடித் தாக்குதல் தவிர்க்கப்பட்டு மண் அரிப்பும் முழுவதுமாகத் தடுக்கப்படுகிறது.மண்ணின் கட்டுமானத் தன்மை முழுமையாக பாதுகாக்கப்படுகிறது.அத்துடன் பிளாஸ்டிக் மண் போர்வையானது நீண்ட நாட்களாக நீடித்து உழைக்கக் கூடியதாக உள்ளது.தர்பூசணி, தக்காளி, மிளகாய், வெண்டை, கத்தரி உள்ளிட்ட பயிர்களுக்கு நிலப்போர்வை அமைப்பதன் மூலம் அதிக மகசூல் ஈட்ட முடியும்.