நிபா வைரசுக்கு 2 பேர் பலி:தமிழக-கேரள சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு


நிபா வைரசுக்கு 2 பேர் பலி:தமிழக-கேரள சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2023 11:30 PM GMT (Updated: 13 Sep 2023 11:30 PM GMT)

நிபா வைரசுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து தமிழக-கேரள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

நீலகிரி

பந்தலூர்

நிபா வைரசுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து தமிழக-கேரள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 2 பேர் நிபா வைரஸ் தாக்கி பரிதாபமாக இறந்து போனானர்கள். இதையடுத்து தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கேரள மாநிலத்தையொட்டி பகுதிகளான நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குநர் பாலுசாமி ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மேற்பார்வையில் பந்தலூர் அருகே தாளூர், பாட்டவயல், நம்பியார்குன்னு, சேரம்பாடி, சோலாடி, நாடுகாணி ஆகிய சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

காய்ச்சல், சளி உள்ளதா?

அதன்படி கோழிக்கோடு, வயநாடு மாவட்டம் சுல்த்தான்பத்தேரி, கண்ணூர், கல்பெட்டா, மேப்பாடி உள்பட கேரள மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அப்போது வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என்றும் சுகாதாரதுறையினர் முககவசம் அணிந்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்திற்கு கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோழிக்கோட்டில் நிபா வைரசுக்கு 2 பேர் இறந்து உள்ளனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் உள்ள பந்தலூரில் சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வாகனங்களும் உரிய முறையில் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் வாகனங்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story