நித்ய கல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் வீதி உலா

நித்ய கல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் வீதி உலா நடந்தது.
கல்லக்குடி:
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கல்லக்குடியில் நித்ய கல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நித்யகல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் சாமி அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் வைக்கப்பட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். வீதி உலாவையொட்டி செண்டைமேளம், கரகாட்டம் மற்றும் சிறப்பு வாண வேடிக்கைகள் நடந்தன. கோவில் மட்டுமின்றி கல்லக்குடி நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வீதிகள் தோறும் தோரணம் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் மேலரசூர், கீழரசூர், முதுவத்தூர், சன்னாவூர், பளிங்காநத்தம், புள்ளம்பாடி, தாப்பாய், வரகுப்பை, மால்வாய், எம்.கண்ணனூர், வடுகர்பேட்டை, கல்லகம், திருச்சி மட்டுமின்றி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர், கிராம பட்டையதாரர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் பிரபு தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






