பீகாரில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று - திருமாவளவன்
ஆளுநரின் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கான இணைப்பு போக்கை உருவாக்க வேண்டியது தான் எனவும் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிக்கக் கூடியதாக, ஜனநாயகத்தை நசுக்கக் கூடியதாக இருந்தது. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த போது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக அந்த முடிவை திரும்பப் பெற்றனர்.
பீகாரில் பா.ஜ.க.விற்கு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று. பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். அந்த கூட்டணி ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக விளங்குகிறது. இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
மேலும், ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கலாம். யாருடனும் அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால்,கவர்னர் தன்னுடைய பொறுப்பை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கான இணைப்பு போக்கை உருவாக்க வேண்டியது தான். ஆனால், அவர் முழு நேர அரசியல்வாதியாகச் செயல்படுகிறார் அது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.