நித்திய கல்யாணி, காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எஸ்.புதூர் அருகே எஸ்.கே.உத்தம்பட்டியில் உள்ள நித்தியகல்யாணி அம்மன், காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே எஸ்.கே.உத்தம்பட்டியில் உள்ள நித்தியகல்யாணி அம்மன், காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு யாகம்
எஸ்.புதூர் ஒன்றியம், செட்டிகுறிச்சி, குன்னத்தூர் கிராமம் எஸ்.கே. உத்தம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நித்திய கல்யாணி அம்மன், காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து கிராம மக்கள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டனர். இதையொட்டி கடந்த 31-ந்தேதி காலை கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா பூர்ணாகுதியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாலை மங்கள இசை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சோமகும்ப பூஜை, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், கும்ப ஸ்தாபன பூஜை, முதல்காலயாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருந்த பெண்கள் கிராம கோவில் மந்தையிலிருந்து முளைப்பாரி சுமந்து வந்து யாகசாலையில் இறக்கி வைத்து வழிபாடு நடத்தினர்.
கும்பாபிஷேகம்
பின்னர் நேற்று காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, துவார மண்டப பூஜை, சூர்ய பூஜை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம், மூலமந்திர ஹோமம், நாடி சந்தானம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, திருமுறை விண்ணப்பம், ஆகம விண்ணப்பம், மகா தீபாராதனை நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. மங்கள இசை வாத்தியம் முழங்க புனிதநீர் குடம் கோவிலை வலம் வந்தது. கருட பகவான் வானில் வட்டமிட நித்திய கல்யாணி அம்மன், காத்தாயி அம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை எஸ்.கே.உத்தம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.