என்.எல்.சி. போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்திய அரசியல் கட்சிகளிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும்


என்.எல்.சி. போராட்டத்தின்போது பொது சொத்துகளை சேதப்படுத்திய அரசியல் கட்சிகளிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும்
x

என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, பொது சொத்துகளை சேதப்படுத்திய அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி மேல்பாதி பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வாய்க்கால் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடந்தது.

இதற்கிடையில் முருகன் என்ற விவசாயி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், "கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தவில்லை என்றால், அந்த நிலத்தை அதன் பழைய உரிமையாளர்களிடமே கொடுத்து விடவேண்டும் என்று நில ஆர்ஜிதம் சட்டம் கூறுகிறது. அதன்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை என்னிடம் திருப்பிக்கொடுக்க என்.எல்.சி. நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அத்துமீறல்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இனி விவசாயிகள் யாரும் பயிர் செய்யக்கூடாது என்று கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வக்கீல் நித்தியானந்தம் ஆகியோர் ஆஜராகி, "ஐகோர்ட்டு உத்தரவின்படி, விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. நிலம் கையகப்படுத்தபட்டு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் தொடர்ந்து விவசாயம் செய்வதை அத்துமீறலாகவே கருதவேண்டும்" என்று வாதிட்டார்.

உரிமை கிடையாது

மேலும், அவர் தன் வாதத்தில், "2006-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை என்.எல்.சி.க்காக 602 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான இழப்பீடு மற்றும் கருணை தொகை பெற்றுள்ள நிலத்தின் உரிமையாளர்கள், இனி நிலத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது.

இழப்பீடு தவிர, நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் ஏக்கருக்கு ரூ.6 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.14 லட்சம் மற்றும் ரூ.25 லட்சம் ரூபாய் என வெவ்வேறு காலகட்டங்களில் கருணைத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அனைத்தும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மேற்கொண்டு எந்த நிவாரணத்தையும் நிலத்தை வழங்கியவர்கள் எதிர்பார்க்க முடியாது" என்று வாதிட்டார்.

ஒப்படைக்க வேண்டும்

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், "கருணைத் தொகை பெறாதவர்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் அரசு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருணைத்தொகை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் வழங்கப்படும். அதற்குள் பயிர் அறுவடையை முடித்து, நிலத்தை ஒப்படைக்க வேண்டும்" என்று கூறினார்.

இதைபதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கருணைத்தொகை முழுவதையும் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் அரசு வழங்க வேண்டும். அதேநேரம், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை செப்டம்பர் 15-ந்தேதிக்குள் விவசாயிகள் என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலத்தில் இனி விவசாயம் செய்யக்கூடாது. மீறி யாராவது விவசாயம் செய்தால், மாநில அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது சொத்து சேதம்

ரூ.25 லட்சம் கருணைத்தொகை என்பது 2014-ம் ஆண்டுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது. அந்த நிலத்துக்கு இழப்பீடு, கருணைத்தொகை வழங்கப்பட்டு விட்டால் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்வது என்பது அத்துமீறலாகவே கருதப்படும்.

அதேநேரம், என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதை ஏற்க முடியாது. அந்த சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை சட்டப்படி உரிய நபர்களிடம் இருந்து வசூலிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story