என்.எல்.சி. நிறுவன நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை மீண்டும் தொடரும்


என்.எல்.சி. நிறுவன நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை மீண்டும் தொடரும்
x

என்.எல்.சி. நிறுவன நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மீண்டும் தொடரும் என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டத்தில், என்.எல்.சி. நிறுவனம் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கான நிலம் எடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், நில நிர்வாக ஆணையர், வருவாய்த்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், இயக்குனர், தலைமைப் பொது மேலாளர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக...

மேலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருள்மொழித்தேவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அழைக்கப்படவில்லை என்றாலும், விவசாயிகள் சார்பாக தானும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக சொல்லி அதில் கருத்துகளை தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் அருள்மொழித்தேவன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்கள். விவசாயிகளுக்கு சம அளவு இழப்பீடு வழங்கவில்லை. நிரந்தர வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. கடலூர் மாவட்டம் மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கே என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு கிடையாது.

மீண்டும் நடத்திக்கொள்ளலாம்

தலைமைச்செயலாளர் இறையன்பு இறுதியாக பேசும்போது, புதிதாக நிறைய விஷயங்கள் எங்களுக்கு இந்த கூட்டத்தில் கிடைத்து இருக்கிறது. எனவே, அதிகாரிகள் அளவில் கலந்து பேசி இந்த விவசாயிகள் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டு, மீண்டும் ஆலோசனை கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார். விவசாயிகளை அழைத்து பேசி முடிவு காணும் வரை நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறும்போது, "என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலம் தந்த விவசாயிகளுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலையும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடியும், மாற்று இடமாக 10 சென்ட் நிலமும் வேண்டும்" என்றார்.

முதல்-அமைச்சர்தெளிவுபடுத்த வேண்டும்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தேவை இல்லை. என்.எல்.சி. நிறுவனத்தால் அங்கு 3 தலைமுறையாக மக்கள் ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களது கோரிக்கை என்னவென்றால், என்.எல்.சி. 3-வது சுரங்கத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டோம், வீராணம், பாளையங்கோட்டை, சேத்தியாத்தோப்பு (கிழக்கு), வடசேரி, மைக்கேல்பட்டி சுரங்கங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் கொடுத்த உறுதியை தெளிவுபடுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story