சேத்தியாத்தோப்பு அருகேஎன்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணியை நிறுத்த கோரி தர்ணா போராட்டம்அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்பட 77 பேர் கைது


சேத்தியாத்தோப்பு அருகேஎன்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணியை நிறுத்த கோரி தர்ணா போராட்டம்அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்பட 77 பேர் கைது
x

சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணியை நிறுத்த கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 3 நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளது. இதில், 2-வது சுரங்கம் விரிவாக்க பணியை மேற்கொள்ள என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தி இருந்தது.

கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனால், சுரங்க விரிவாக்க பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் என்.எல்.சி. நிர்வாகத்துடனும், கிராம மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி. உறுதி அளித்தது. ஆனால் சிலருக்கு இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

பணிகள் தொடக்கம்

இதற்கிடையே, வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க விரிவாக்க பணியை நேற்று முன்தினம் முதல் என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது.

முதற்கட்டமாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணி நடைபெற்றது.

என்.எல்.சி.யின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று முன்தினம் பா.ம.க., கிராம மக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெற்றது. இதன் மூலம் 80 பேர் கைதாகி மாலையில் விடுதலை ஆனார்கள்.

போலீஸ் குவிப்பு

தொடர்ந்து, அந்த பகுதியில் பதற்றம் நீடிப்பதால், கலவரம் ஏதேனும் நிகழ்ந்தால் தடுக்கும் வகையில் வருண் வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், ஸ்ரீநாதா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று டி.ஐ.ஜி. பாண்டியன் நேரில் வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு, ஆலோசனை நடத்தினார்.

எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம்

இதற்கிடையே, புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் விவசாயிகளை சந்திப்பதற்காக வளையமாதேவி கிராமத்திற்கு நேற்று வருகை தந்திருந்தார். அங்கு விவசாயிகளிடம் நடந்த விவரம் குறித்து அவர் கேட்டறிந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அங்கு வந்த டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையிலான போலீசார், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.வை கைது செய்யபோவதாக தெரிவித்தனர். ஆனால், அவர் எதற்காக என்னை கைது செய்ய வேண்டும்? நான் மக்களை சந்தித்து பேசுவதற்கு தான் வந்துள்ளேன் என்று கூறினார்.

ஆனால் போலீசார் தரப்பில், இந்த பகுதிக்கு வந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. எனவே கைது நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தனர். அப்போது, போலீசார் மற்றும் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலையோரம் அமர்ந்து தர்ணா

இதை தொடர்ந்து, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. செல்போன் மூலம் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் பேசினார். அதில், இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு நிறுத்தினால் நான் கைதாவதாக தெரிவித்தார். அப்போது கலெக்டர் அளித்த பதில், அருண்மொழிதேவனுக்கு திருப்திகரமானதாக இல்லை என்று தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கிராமத்து மக்களுடன் அந்த பகுதியில் சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, என்.எல்.சி. மற்றும் சுரங்கம் அமைக்கும் பணிக்கு துணை போவதாக கூறி தமிழக அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

77 பேர் கைது

தொடர்ந்து அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் விநாயகம், சீனிவாசன், வேல்முருகன், சந்திரகுமார், ஜெயசீலன், எஸ்.கே. நன்மாறன், வாகை இளங்கோவன் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story