சுரங்கத்தில் இருந்து பணி முடிந்து வந்தஎன்.எல்.சி. தொழிலாளி திடீர் சாவுநிர்வாக அலுவலகத்தை குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து பணிமுடிந்து வந்த தொழிலாளி திடீரென உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி அடுத்த ஊத்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). இவரது தம்பி செல்வராஜ். இவர்கள் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-வது நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்களாக உள்ளனர்.
நேற்று இரவு ராஜேந்திரன், செல்வராஜ் வழக்கம் போல், வேலைக்கு சென்றனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வேலை முடிந்து, சுரங்கத்தில் இருந்து அவர்கள் வெளியே வந்தனர்.
திடீரென மயக்கம்
அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். செல்வராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். சுரங்க பகுதியில் இருந்து கடலூர்-விருத்தாசலம் மெயின்ரோட்டில் அவர்கள் ஏறிய போது, பின்னால் அமர்ந்திருந்த ராஜேந்திரன் தனக்கு மயக்கமாக வருகிறது, வண்டியை நிறுத்து என்று கூறி உள்ளார். உடன் செல்வராஜ், வண்டியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கினார். ஆனால், அதற்குள் ராஜேந்திரன் மயங்கிவிட்டார். இதையடுத்து அவரை கைத்தாங்கலாக பிடித்து, உட்காரவைத்தார். பின்னர் ஆம்புலன்சில் ராஜேந்திரனை அழைத்துக்கொண்டு, நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராஜேந்திரன் இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.
நிர்வாக அலுவலகம் முற்றுகை
இதுபற்றி அறிந்த ராஜேந்திரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் 2-ன் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, என்.எல்.சி. அதிகாரிகள் தரப்பில், இறப்பு நிதியாக ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த பணி வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீசார், ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சுரங்கப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.