கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்  கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர்

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், காரைக்காலின் தென் கிழக்கே 630 கி. மீ. தொலைவிலும் இருந்தது.

சென்னைக்கு கிழக்கு- தென் கிழக்கே 670 கி.மீ. தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மெதுவாக வடமேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

1-ம் எண் புயல் எச்சரிக்கை

இதனிடையே கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தொலை தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். மேலும் கடல்பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ, . வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எசச்ரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்ட கடல் பகுதியில் நேற்று கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சீறி பாய்ந்த அலைகளை பொதுமக்கள் நின்றுவேடிக்கை பார்த்தனர். சிலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்தனர். கடலூர் தாழங்குடா பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் பைபர் படகுகளை பாதுகாப்பாக கடற்கரையோரம் நிறுத்தி வைத்தனர். டிராக்டர் மூலம் பாதுகாப்பாக இழுத்து கடற்கரையை தாண்டி கொண்டு சென்று நிறுத்தினர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

இதேபோல் கடலூர் துறைமுகத்தில் இருந்து விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தினர்.

பரங்கிப்பேட்டை, கிள்ளை, முழுத்துக்துறை, எம்.ஜி.ஆர்.திட்டு உள்ளிட்ட மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை மீன்பிடி தளங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.


Next Story