கோவையில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை
கோவையில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள்.
கோவையில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள்.
மாவட்ட அளவிலான குழு கூட்டம்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாலைகளை சீரமைக்கவில்லை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் உள்ள நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி, அந்தந்த கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி இருந்தார்.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை வழங்கி இருந்தனர்.
அந்த மனுக்கள் தொடர்பான இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, கோவை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல், மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு படுமோசமாக காட்சியளிக்கிறது.
ஏற்கனவே நாங்கள் சாலை அமைக்க போட்டு இருந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகளையும் சரியாக முடிக்கவில்லை. எனவே மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கும் சாலை பணியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பேசினார்.
அகலப்படுத்த வேண்டும்
பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசும்போது, வெள்ளலூரில் இருந்து கோவில்பாளையம் வரை செல்லும் 23 கி.மீ. தூரம் கொண்ட சாலை 3 மீட்டர் அகலத்தில் உள்ளது.
இதை 10 மீட்டராக அகலப்படுத்த ரூ.72 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்காக டெண்டரும் விடப்பட்டது. ஆனால் அதற்குள் தேர்தல் வந்ததால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தினால் விவசாயிகள் பலருக்கு உதவியாக இருக்கும். அதை செய்ய வேண்டும் என்றார்.
அதுபோன்று மற்ற எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது, சாலைகள்தான் படுமோசமாக காட்சியளிக்கிறது. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பணியை நிறைவேற்ற வேண்டும் என்றனர். அதற்கு கலெக்டர் சமீரன் பதிலளித்து பேசும்போது, எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய முக்கிய திட்டங்களை அரசுக்கு பரிந்துரை செய்து, அதற்கான நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.