வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு


வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு
x

வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வெளிநாட்டில் இருந்து நாய்களை வர்த்தக ரீதியாக இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மேனகா காந்தி கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி கடிதம் எழுதினார். அதில், "வெளிநாட்டில் இருந்து தடையின்றி வர்த்தக ரீதியாக நாய்கள் இறக்குமதி செய்யப்படுவதால், அந்த நாய்களிடம் இருந்து உள்நாட்டு நாய்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு நாய்களுடன் கலப்பினம் செய்யப்படுவதால், உள்நாட்டு நாய்களின் மரபணுவில் பாதிப்பு ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார்.

நாய்களுக்கு தடை

இந்த கடிதத்தை பரிசீலித்த அன்னிய வர்த்தகத்துறை தலைமை இயக்குனர், வெளிநாட்டு நாய்களை வர்த்தக ரீதியாக இறக்குமதி செய்ய தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கென்னல் கிளப் ஆப் இந்தியா, தி மெட்ராஸ் கென்னல் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் வழக்குகளை தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆர்.ஸ்ரீனிவாஸ், வி.செல்வராஜ், வக்கீல் மைதிலி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

ரத்து

அவர்கள் தங்கள் வாதத்தில், "எந்த ஒரு ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நாய்களுக்கு நோய் பரவியது என்பதற்கு ஆதாரம் இல்லை" என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அறிவியல்பூர்வமான ஆய்வுகளை எதுவும் மேற்கொள்ளாமல், இந்த தடையை விதித்துள்ளதால், அந்த தடை உத்தரவை ரத்து செய்கிறேன். அதேநேரம், வெளிநாட்டு நாய்கள் இறக்குமதியை மத்திய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்.

கோம்பை-கன்னி

ஒருகாலத்தில் நம் நாட்டில் தாஜி, பூடானி, பஞ்சாரி, வடக்கு தோல், எஸ்கிமாக்ஸ் நாய், தெற்கு டோ, சலுகி, கூச்சி, போடியா (இமயமலை செம்மறி நாய் மற்றும் அதன் வகைகள்), திரிபுரி நாய், வகாரி ஹவுண்ட், மராத்தா முதோல் அல்லது பஷ்மி ஹவுண்ட், ராஜபாளையம், தனகரி, பொலிகர், சிப்பிப்பாறை தம்பி, சிப்பிப்பாறை ராஜா, பட்டி நாய், பக்கர்வால், ஜோனாங்கி, கோம்பை, சிந்தி, பாண்டிகோனா, லாசா, அலக்நூரி, கைகாடி, கன்னி, குருமலை என்று ஏராளமான நாய் இனங்கள் நம்மிடம் இருந்தன. இப்போது இதில், எத்தனை இனங்கள் நம்மிடம் உள்ளன? இந்த நாய்கள் இனங்கள் எல்லாம் பாதுகாக்க வேண்டும்.

கொள்கை முடிவு

எனவே, இந்த மாநிலத்தின் நாட்டு நாய்களை இனப்பெருக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்து விளக்கம் பெற தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவர், நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு தொடர்பாக ஒழுங்கு விதிகள் மற்றும் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை வருகிற ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story