வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சியில் முறையாக மேற்கொண்ட செலவினங்களில் பரிவர்த்தனைகள், எம்.எம்.எஸ். படிவங்கள் மற்றும் காசோலைகளில் ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து கையொப்பமிட மறுப்பது.
வருகை பதிவேட்டில் மட்டும் கையொப்பமிட்டு விட்டு கூட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது. ஊராட்சி பணியாளர்களை தரக்குறைவாக பேசி அவமதிப்பது, வரிவசூல் பணத்தை கேட்டு மிரட்டுவது போன்றவைகளால் ஊராட்சி நிர்வாகத்தை முடக்கியுள்ள துணைத்தலைவர் பாலாமூர்த்தி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் லதா, சுரேஷ், அமுதா, வசந்தி, பூபாலன், ரவி, அமுதா, லிங்கசாரதி, சற்குணராஜ், மஞ்சு, பானுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து இந்த தீர்மான நகலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் முருகேசை நேரில் சந்தித்து துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.