அடையாளங்களை அழிக்கக்கூடாது: ஜல்லிக்கட்டுகளில் அலங்காரத்துடன் காளைகளை அனுமதிக்கக்கோரி கலெக்டரிடம் மனு


அடையாளங்களை அழிக்கக்கூடாது: ஜல்லிக்கட்டுகளில் அலங்காரத்துடன் காளைகளை அனுமதிக்கக்கோரி கலெக்டரிடம் மனு
x

ஜல்லிக்கட்டுகளில் அலங்காரத்துடன் காளைகளை அனுமதிக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை


ஜல்லிக்கட்டுகளில் அலங்காரத்துடன் காளைகளை அனுமதிக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மரியாதை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் மனு கொடுத்தனர். அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் சார்பில் கலெக்டர் அனிஷ்சேகரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. காளைகளை கோவில்களிலும், வீட்டிலும் முறையாக தெய்வ வழிபாடு செய்து மாலை மரியாதை செய்து சந்தனம், குங்குமம், மஞ்சள், திருநீரு பூசி தெய்வம் போல் அலங்கரித்து வாடிவாசலுக்கு கொண்டு வருகிறோம்.

அலங்காரங்களை அழிக்க கூடாது

அதே போல் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வீட்டுக்கு திரும்பும் காளைகளை போருக்கு சென்று திரும்பும் வீரனை போல ஆரத்தி எடுத்து மரியாதை செய்வோம். காளை அலங்காரத்தோடு இருப்பது எங்கள் தெய்வம் இருப்பது போன்றது. ஆனால் தற்போது நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசலுக்கு வரும் அதிகாரிகள், காளைகளிடம் உள்ள மணி, கழுத்து துண்டு, கொம்பின் அடையாளம் உள்பட அனைத்து அடையாளங்களையும் அழித்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிப்போம் என்று கூறுகின்றனர். காளைகளின் அலங்காரங்களை அழிப்பது தவறானதாகும். எனவே நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளின் அடையாளங்களை அழிக்க கூடாது. அதனை கலெக்டர் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அவர்கள் காளைகளை போல கழுத்தில் மணி, மாலை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கருவேல மரம்

மதுரை திருமங்கலம் சிவரக்கோட்டை கிராம மக்கள், கலெக்டர் அனிஷ்சேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவரக்கோட்டை, கரிசல்குளம் கண்மாயில் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து உள்ளது. அதனால் காட்டுபன்றிகள் மற்றும் மான்களின் வாழ்விடமாக இருக்கிறது. இதில் காட்டு பன்றிகள், பகலில் அங்கு தங்கி விட்டு இரவில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை அழிக்கிறது. அதுமட்டுமின்றி கண்மாயில் முழு அளவு தண்ணீர் தேக்க முடியவில்லை. எனவே இந்த கருவேல மரங்களை உடனடியாக அகற்றி விட்டு, கண்மாயில் முழு அளவு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டு பன்றி பிரச்சினைக்கும் தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story