பலூன் திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது


பலூன் திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது
x
தினத்தந்தி 14 Jan 2023 12:30 AM IST (Updated: 14 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பலூன் திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு நுழைவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆச்சிப்பட்டி ஊராட்சி மற்றும் அதை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதனால் ரூ.100 கட்டணம் கொடுத்து பலூன் திருவிழாவை பார்ப்பது சிரமமானதாகும் என்று கடந்த 2 நாட்களுக்கு மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று சப்-கலெக்டர் பிரியங்காவை சந்தித்து ஆச்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் பலூன் திருவிழாவிற்கு கிராமப்புறங்களில் இருந்து மக்கள் வந்து கலந்துகொள்ளும் வகையில் நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த அரசின் சுற்றுலா வளர்ச்சி துறை விழா நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. மேலும் பொருட்கள் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஒரு அரசு விழாவிற்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்றனர். இதையடுத்து சப்-கலெக்டர் இதுகுறித்து ஆலோசித்து பதில் அளிப்பதாக கூறினார். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சியில் நடைபெறும் பலூன் திருவிழாவிற்கு வெளிநாடுகளில் இருந்து பலூன்கள் கொண்டு வரப்பட்டு பறக்க விடப்படுகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் விழாவை பார்க்க வருகின்றனர். ஆனால் விழா வளாகத்தில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு துறை வாகன வசதி எதுவும் இல்லை. எனவே விழா வளாகத்தில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story