இழப்பீடு வழங்கினாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: சிறுமியை விபசாரத்தில் தள்ளிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இழப்பீட்டுத்தொகை வழங்கினாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும், சிறுமியை விபசாரத்தில் தள்ளிய 5 பேருக்கு கரூர் கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை உறுதி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இழப்பீட்டுத்தொகை வழங்கினாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும், சிறுமியை விபசாரத்தில் தள்ளிய 5 பேருக்கு கரூர் கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை உறுதி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
13 வயது சிறுமி
கரூர் பகுதியில் வசித்த தம்பதியின் 13 வயது சிறுமி சரிவர படிக்காததால், பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார். கடந்த 18.11.2017 அன்று ஒரு பெண், அந்த சிறுமியிடம் புது துணிகள், மேக்கப் சாதனங்கள், திண்பண்டங்கள் வாங்கித்தருகிறேன் என அழைத்தார்.
இதை நம்பிய அந்த சிறுமி, அவருடன் சென்றார். அந்த பெண் உள்பட சிலர் சேர்ந்து சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்று, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். சில நாட்களில் அங்கிருந்து தப்பிய சிறுமி, இந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து, 7 பேரை கைது செய்தனர். ஏற்கனவே இந்த கும்பல் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிந்தது.
ஆயுள்தண்டனை
இந்த வழக்கு விசாரணை முடிவில், மணி, சிவகுமார் மற்றும் 3 பெண்கள் என 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கரூர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது. 2 பேரை விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கண்ட 5 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனுதாரர்கள் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீட்டை வழங்கியுள்ளனர். சிறுமி மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன என தெரிவித்தனர்.
தப்பமுடியாது
கூடுதல் அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரர்கள் அனைவரும் கூட்டாக திட்டமிட்டு சிறுமியை கடத்தியதற்கு ஆதாரம் உள்ளது. சிறுமிக்கு இழப்பீடு வழங்கியதால் மட்டும் மனுதாரர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிட முடியாது என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பாதிக்கப்பட்ட சிறுமி, மனுதாரர்கள் மீது கூறிய குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார். அதற்கான மருத்துவ பரிசோதனை முடிவுகளும் சாதகமாக உள்ளன.
தண்டனை உறுதி
சம்பவத்திற்கு பின், அந்த சிறுமி தனது வாழ்வாதாரத்திற்காக விபசாரத்தை கையில் எடுத்தால், அதற்கு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் பொறுப்பு. மனுதாரர்கள் அளித்த இழப்பீட்டு தொகையானது, சிறுமி பறிகொடுத்த மரியாதையை திரும்பத்தராது.
எனவே மனுதாரர்களுக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழங்கப்பட்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அவர்களின் ஜாமீனை நிறுத்திவைக்கிறோம். மனுதாரர்கள் வருகிற 25-ந்தேதிக்குள் கீழ்கோர்ட்டில் சரண் அடைய வேண்டும். தவறும்பட்சத்தில் போலீசார் அவர்களை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.