இனி இல்லை ரத்தசோகை ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம்
இனி இல்லை ரத்தசோகை ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்த பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் இனி இல்லை ரத்தசோகை என்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கும் ரத்தசோகை விழிப்புணர்வு முகாமின் செயல் திட்டம் குறித்து இனி இல்லை ரத்தசோகை என்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட உள்ளது.
இதில் மகளிர் திட்டம் மூலம் சமூக வளக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், இந்த பிரச்சார வாகனம் மூலம் வாரத்திற்கு 4 நாட்கள் வீதம் 3 மாத காலத்திற்கு வட்டாரத்தின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொடர்ந்து பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஊட்டச்சத்து உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.