ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேவை இல்லை கடலூரில் நடிகர் தம்பிராமையா பேட்டி
ஈரோடு இடைத்தேர்தல் தேவை இல்லை என்று கடலூரில் நடிகர் தம்பிராமையா கூறினார்.
கடலூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான தம்பிராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜகிளி படம்
ராஜாகிளி என்ற புதிய படத்தில் நானும், இயக்குனர் சமுத்திரக்கனியும் நடித்து வருகிறோம். இந்த படத்தில் கதை, வசனம் எழுதி இருக்கிறேன். என்னுடைய மகன் உமாபதி ராமையா திரைக்கதை எழுதி, இயக்குனராக உள்ளார். 1954-ல் வெளி வந்த ரத்தக்கண்ணீர் மாதிரி ராஜாகிளி படம் இருக்கும்.
முதுமையில் செழுமையாக இருக்க வேண்டும் என்றால், இளமையில் சரியாக இருக்க வேண்டும். இந்த மைய கருத்தை வலியுறுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் மாதம் திரைக்கு வரும். இதுபற்றி முறையான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.
இடைத்தேர்தல் தேவை இல்லை
அரசியலும், சினிமாவும் பின்னிபினைந்தது தான், என்றாலும் இன்றைய சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேவை இல்லை என்று தான் சொல்வேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அந்த தொகுதியில் ஆட்சி அதிகாரங்கள், மனித உழைப்புகள் கொட்டி கிடக்கிறது. 233 குழந்தைகளும் தாய் இல்லாத குழந்தைகள் போல் தவிக்கிறது. இதை யோசித்து பார்த்தால், இது தான் ஜனநாயகம். இது தான் அரசியல்.
இதை வெளியில் இருந்து பேசலாம். ஒரு இயக்கத்தில் இருந்து தான் பேச வேண்டும் என்பதல்ல. இந்த உணர்வை வைத்து அடுத்த படம் தயாரிப்பேன். இடைத்தேர்தலில் உடன்பாடு உண்டா? இல்லையா? என்றால் இல்லை என்று தான் சொல்வேன். எதற்காக என்றால், இந்த ஒரு எம்.எல்.ஏ. வந்து ஆட்சி மாற்றம் செய்ய போகிறாரா? ஆட்சி கவிழ போகிறதா? எதுவும் நடக்க போவதில்லை. இவர் தான் எம்.எல்.ஏ. என்று அறிவித்து விட்டு போகலாம்.
வியாபாரம்
உதயநிதி ஸ்டாலின் தகுதியான படங்களை வாங்கி வினியோகம் செய்கிறார். சினிமா என்பது வியாபாரம், அந்த வியாபாரத்தில் அவர் சரியாக பணத்தை கொடுத்து விடுகிறார். அதனால் அவரிடம் படம் தயாரித்து கொடுக்கிறார்கள். சினிமா ஞானம் அதிகம் உள்ள கமல்ஹாசனும் படத்தை அவரிடம் தான் கொடுக்கிறார். கொடுக்கல், வாங்கலில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு நடிகர் தம்பிராமையா கூறினார்.