டிஐஜி மரணத்தை அரசியலாக்க தேவையில்லை - ஏடிஜிபி அருண் பேட்டி


டிஐஜி மரணத்தை அரசியலாக்க தேவையில்லை - ஏடிஜிபி அருண் பேட்டி
x

டிஐஜி விஜயகுமார் உடலுக்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கோவை,

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் எழுந்த விஜயகுமார், வீட்டை விட்டு வெளியில் வந்தார். வீட்டு வளாகத்தில் சிறிது நேரம் அங்கும், இங்கும் நடந்தார். திடீரென தனது பாதுகாவலர் ரவி வைத்திருந்த கை துப்பாக்கியை விஜயகுமார் கேட்டார். உயர் அதிகாரி கேட்பதால் பாதுகாவலரும் எந்த கேள்வியும் கேட்காமல் துப்பாக்கியை கொடுத்தார்.

விஜயகுமார் வீட்டுக்குள் துப்பாக்கியை கொண்டு சென்ற சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் வந்தது. இதனால் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதை உணர்ந்த அவரது பாதுகாவலர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கு வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக போலீஸ்காரர்களை அழைத்து கொண்டு உள்ளே சென்றார். சத்தம் கேட்டு வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவியும் எழுந்து அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது வீட்டிற்குள் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பிணமாக கிடந்தார். அவரது கையில் துப்பாக்கி இருந்தது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் டி.ஐ.ஜி. வீட்டிற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த பாதுகாவலர்களிடம் விசாரித்தனர். பின்னர் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவை, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏடிஜிபி அருண் கூறுகையில்,

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாருக்கு பணிச்சுமையோ, குடும்ப பிரச்சினையோ எதுவும் இல்லை. மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி மரணத்தை அரசியலாக்க தேவையில்லை. பணிச்சூழலில் எந்த பிரச்சினையும் இல்லாத டிஐஜி விஜயகுமார் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். கோவையை சேர்ந்த ஐஜி, எஸ்.பி போன்ற அதிகாரிகளுடன் விஜயகுமார் சிகிச்சைக்காக ஆலோசித்துள்ளார்" என்று கூறினார்.


Next Story