கவர்னர்கள் கருத்து சொல்வதை யாரும் தடுக்க முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


கவர்னர்கள் கருத்து சொல்வதை யாரும் தடுக்க முடியாது  தமிழிசை சவுந்தரராஜன்  பேட்டி
x

கவர்னர்கள் கருத்து சொல்வதை யாரும் தடுக்க முடியாது. தேவைப்பட்டால் நான்கூட அரசியல் பேசுவேன் என்று திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி

கவர்னர்கள் கருத்து சொல்வதை யாரும் தடுக்க முடியாது. தேவைப்பட்டால் நான்கூட அரசியல் பேசுவேன் என்று திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் திட்டங்கள்

திருச்சி இந்திராகாந்தி கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் நல்ல பல திட்டங்களை அறிவித்து வருகிறோம். குறிப்பாக பெண்களுக்கு வேலை நேரத்தில் 2 மணி நேர வேலை சலுகை, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 அறிவிக்கப்படாமலேயே வழங்கி இருக்கிறோம். புதுச்சேரி ஜிப்மரில் நிர்வாக ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து வருகிறோம். ஆனால் சில கட்சிகள் வேண்டுமென்றே ஜிப்மரை கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளார்கள்.

கவர்னர் பதவி தேவையில்லை என கூறுபவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ராஜ்பவன் படிக்கட்டுகளையே மிதித்திருக்க கூடாது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் எடுப்பவர்கள் முதலில் நிலையான முடிவுக்கு வரட்டும்.

கருத்துரிமை

கவர்னர்களுக்கும் கருத்துரிமை இருக்கிறது. அவர்கள் கருத்துக்களை கூறுவதை யாரும் தடுக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில் நான் கூட அரசியல் நன்றாகவே பேசுவேன். கவர்னர்கள் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக மட்டுமல்லாமல் பலமாகவும் இருக்கிறார்கள். கவர்னர்களை கவர்னர்களாக நடத்த வேண்டும். கவர்னர்கள் ஒரு கருத்து கூறினால் எதிர் கருத்து கூறலாமே தவிர கடுமையாக விமர்சிக்க கூடாது.

கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்க இருக்கிறேன். தீவிரவாதம் எந்த இடத்தில் இருந்தாலும் அது தடுக்கப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் எனக் கூறுபவர்கள் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கூறுவது ஏன்? திரும்பத் திரும்ப அறிவிப்புகள் கொடுக்கும் அரசையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அறிவிப்புகள் கொடுத்து அதை திரும்பப் பெரும் அரசாக தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story