3 மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை
ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டத்தில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்றுகூறி செயல் அலுவலரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எந்த பணியும் நடக்கவில்லை
ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா வரவேற்றார்.
செயல் அலுவலர் ராமு தீர்மானங்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது 5-வது வார்டு கவுன்சிலர் கீர்த்தனா எனது வார்டில் சேதமடைந்த பைப் லைன்களை சீரமைத்து தரும்படி மூன்று மாதமாக கோரிக்கை வைத்தேன். ஆனால் இதுவரை அவை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதுவரை எனது வார்டுக்கு என்ன செய்தீர்கள் என்று செயல் அலுவலரை பார்த்து கேட்டதுடன் ரூ.2 ஆயிரத்துக்குக்கூட எனது வார்டில் வேலை செய்ய முடியாதா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முற்றுகை
அதனைத் தொடர்ந்து பேசிய 10-வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் எனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தாலும் அதனை தீர்மானங்களாக நிறைவேற்றுவதில்லை என்று கூறி தீர்மான நகலை தூக்கி வீசினார்.
பின்னர், இருக்கையை விட்டு எழுந்து சென்று செயல் அலுவலரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் பூச்சிகள் உற்பத்தியாகி உள்ளதால் அதனை மாதம் தோறும் சுத்தம் செய்ய வேண்டும். செயல் அலுவலர் பதவியேற்று மூன்று மாதங்களாகியும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் மூன்று மாத வரவு, செலவு கணக்கை மன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.