தி.மு.க.வினர் உறுப்பினர்களாக நியமனம்: வாயில் கருப்பு துணியை கட்டி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
தி.மு.க.வினர் உறுப்பினர்களாக நியமனம்: வாயில் கருப்பு துணியை கட்டி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், 1 வார்டில் சுயேச்சையும், 7 வார்டுகளில் அ.தி.மு.க.வினரும் கவுன்சிலர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு பகுதி சபை கூட்டம் நடந்தது. இதில் கூட்டம் நடத்த அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைவராகவும், அலுவலக பணியாளர் ஒருவர் செயலாளராகவும், வார்டு பொதுமக்களில் 3 பேர் சபை உறுப்பினராகவும் நியமனம் செய்து கூட்டம் நடத்த வேண்டும். இந்நிலையில் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சபை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 3 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக இருந்தனர். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து நேற்று நடந்த பகுதி சபை கூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கவுன்சிலர் இளங்கோவன் கூறியதாவது, பகுதி சபை கூட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 3 உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண்கள் இல்லை. மேலும் அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். எனவே இந்த கூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்து வாயில் கருப்பு துணி கட்டி அலுவலகத்தில் போராட்டம் செய்தோம் என்றார். அதன் பின் தங்களது கோரிக்கை மனுவை செயல் அலுவலர் சண்முகத்திடம் கொடுத்தனர்.