மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத18 கடைகளுக்கு 'சீல்'


மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத18 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 22 Feb 2023 7:00 PM GMT (Updated: 22 Feb 2023 7:01 PM GMT)

திண்டுக்கல் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 18 கடைகளுக்கு ‘சீல்' வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

மாநகராட்சி கடைகள்

திண்டுக்கல் பஸ் நிலையம், பூ மார்க்கெட், சோலைஹால் ரோடு, மேற்குரதவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் ஆண்டுக்கணக்கில் பாக்கி வைத்திருந்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனாலும் வாடகையை செலுத்தாமல் அவர்கள் காலதாமதம் செய்து வந்தனர். இதையடுத்து மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையாளர் (பொறுப்பு) நாராயணன் உத்தரவிட்டார்.

18 கடைகளுக்கு 'சீல்'

அதன்பேரில் மாநகராட்சி கண்காணிப்பாளர் வில்லியம் சகாயராஜ் தலைமையில் வருவாய் அலுவலர்கள் திண்டுக்கல் பகுதியில் உள்ள கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 4 கடைகள், அண்ணா வணிக வளாகம் பகுதியில் ஒரு கடை, சோலைஹால் ரோடு பகுதியில் 6 கடைகள், மேற்குரதவீதியில் 7 கடைகள் என மொத்தம் 18 கடைகள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கடைகளை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, வரி ஆகியவற்றை முறையாக செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தவறும் பட்சத்தில் கடைகளுக்கு 'சீல்' வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story