சுற்றுலா விசாவை நம்பி தொழிலாளர்கள் யாரும் மலேசியாவுக்கு வர வேண்டாம்-மனிதவள மந்திரி டத்தோ ஸ்ரீசரவணன் வேண்டுகோள்


சுற்றுலா விசாவை நம்பி தொழிலாளர்கள் யாரும் மலேசியாவுக்கு வர வேண்டாம்-மனிதவள மந்திரி டத்தோ ஸ்ரீசரவணன் வேண்டுகோள்
x

சுற்றுலா விசாவை நம்பி தொழிலாளர்கள் யாரும் மலேசியாவுக்கு வர வேண்டாம் என்று மலேசிய மனிதவள மந்திரி டத்தோ ஸ்ரீசரவணன் ராமநாதபுரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

ராமநாதபுரம்


சுற்றுலா விசாவை நம்பி தொழிலாளர்கள் யாரும் மலேசியாவுக்கு வர வேண்டாம் என்று மலேசிய மனிதவள மந்திரி டத்தோ ஸ்ரீசரவணன் ராமநாதபுரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

எந்திரமயமாக்கும் சூழல்

மலேசிய நாட்டின் மனிதவள மந்திரி டத்தோ ஸ்ரீ சரவணன். இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவில் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசிய மந்திரி ராமநாதபுரம் வந்திருந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்னும் 10 ஆண்டுகளில் 4-வது தொழில் புரட்சி ஏற்பட இருக்கிறது. இந்த தொழிற்புரட்சி உலகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த தொழில் புரட்சியை எதிர்கொள்ள தமிழர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் முழுக்க முழுக்க எந்திரமயமாகும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழர்கள் தங்களை அதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுற்றுலா விசா

மலேசியாவிற்கு 14 நாடுகளில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வந்து பணியாற்றி வருகின்றனர். முறையான ஆவணம் இன்றி சுற்றுலா விசாவில் வருபவர்கள் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசிடம் புகார் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களின் நிலை தெரியாமல் போய்விடுகிறது. இவ்வாறு முறையான விசா இன்றி வருபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். எனவே, சுற்றுலா விசாவை நம்பி தொழிலாளர்கள் யாரும் வரவேண்டாம்.

புதிய செயலி

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவில் வேலைக்கு வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மலேசியாவில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் புகார் தெரிவிக்க இந்த செயலியை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் மலேசியாவிற்கு வரும் தொழிலாளர்களின் பிரச்சினைகள், அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து கவனத்திற்கு வரமுடியாத நிலை இருந்தது. இதனை போக்கும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவிற்கு வரும் தொழிலாளர்களுக்கு இந்த செயலி குறித்து தெரிவிக்கப்படும். இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகாருக்கு 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

15 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை

இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த செயலி மூலம் அளிக்கப்பட்ட 15 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழர்கள் உணவகம் மற்றும் மின் கம்பங்கள் பொருத்தும் பணி ஆகியவற்றில் மட்டுமே தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏனெனில் இந்த இரு துறைகளில் பணியாற்றுவதற்கு மட்டும்தான் மத்திய அரசுடன் மலேசிய அரசு உடன்பாடு செய்து உள்ளது.. மத்திய அரசு மலேசிய அரசை கேட்டுக்கொண்டால் அனைத்து துறைகளிலும் பணிபுரிய தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்துல்கலாம் அருங்காட்சியகம்

முன்னதாக ராமேசுவரம் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற அவர் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். மலேசியா மனிதவளத்துறை மந்திரிக்கு கலாமின் குடும்பத்தினர் நினைவு பரிசு வழங்கினர். பின்னர் வீட்டின் மேல்தளத்தில் உள்ள கலாமின் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படம் மற்றும் நினைவுபரிசுகளையும் மந்திரி பார்வையிட்டார். அப்போது உடன் கலாமின் அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன் சேக் சலீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன்பின்னர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய மலேசியா மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீசரவணன் மணிமண்டபத்தில் இடம்பெற்று இருந்த கலாமின் சாதனைகள் அடங்கிய புகைப்படம் உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டார்.


Related Tags :
Next Story